சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்காக ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் விண்கலம் பொருத்தப்பட்டு கவுண்ட் டவுன் தொடங்கியது. எனினும் விண்கலம் புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் எரிவாயுக் குழாயில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விண்கலம் அனுப்புவதை நிறுத்திய அதிகாரிகள் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பழுது சரி செய்யப்பட்டு வரும் ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்துவதன் மூலம் நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்கவுள்ளது.