சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டரில் நிகழ்ந்த தவறு குறித்து, தேசிய அளவிலான குழு ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஆர்பிட்டரிலிருந்து தனியாக பிரிந்த லேண்டர், கடந்த 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயற்சி செய்தது. எனினும் நிலவிலிருந்து 2 புள்ளி 1 கிலோமீட்டர் தொலைவில் பூமியுடனான தகவல் தொடர்பை இழந்தது. லேண்டருடன் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட எந்தவித முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் செயல்பாடு எதிர்பார்த்ததைப் போல சிறப்பாக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் லேண்டரில் ஏற்பட்ட தவறு குறித்து ஆராய தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் காரணம் கண்டறியப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.