திட்டமிட்டபடி நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டப்படி நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோ தயாரித்துள்ள சந்திரயான்-2 விண்கலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலம், 45 நாள்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலாவில் இறங்கும். சுமார் 603 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஏவுதளப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு ஏற்படாத வகையில் அனைத்து கருவிகளும் பலமுறை சோதனை செய்யப்பட்டு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்படுகிறது. இதனிடையே சந்திரயான்-2 ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார்.

Exit mobile version