கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் சந்திப்பதும், வரும் 13ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினையும் அவர் சந்திக்க உள்ளதும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது காங்கிரஸ் கட்சியை மாநிலக் கட்சிகள் கைகழுவியதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்…
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அக்கட்சிக்கே தெரிந்த ஒன்று. அவர்களின் இலக்கு எல்லாம் மீண்டும் பாஜக ஆட்சி வராமல் தடுப்பதாக மட்டுமே இருந்தது. ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அப்போது அந்த ஆட்சியில் பங்குபெற மட்டுமே காங்கிரஸ் மனக் கோட்டை கட்டியது.
இதனால், பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் அரும்பாடு பட்டதும், அதற்காக பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை ராகுல் காந்தி விட்டுக் கொடுத்ததும் மக்கள் அறிந்த நிகழ்வுகளே.
வரும் 21ஆம் தேதிதான் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி தங்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க உள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஒன்று சத்தம் இல்லாமல் உருவாகி வருவது காங்கிரசுக்கு அடுத்த அதிர்ச்சியாக உள்ளது.
மாநிலக் கட்சிகளிடம் சரணடைய காங்கிரஸ் தயாராக உள்ளபோதும், காங்கிரஸை நம்ப மாநிலக் கட்சிகள் தயாராக இல்லை. மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் ஆகியோருக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர்கள் இணைந்து காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமையக் கூடும் என்று ஒரு கணிப்பு இருந்தது.
இதில் இரண்டு முக்கிய நபர்களான சந்திர சேகர ராவும் – பினராயி விஜயனும் சந்தித்துக் கொள்வது மூன்றாவது அணி உருவாவதை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதனைப் பிற கட்சிகள் ஏற்காததால் சூடும் பட்டுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினை சந்திர சேகர்ராவ் வரும் 23ஆம் தேதி சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல இன்னும் பல மாநிலக் கட்சியினரை சந்திர சேகர ராவ் தொடர்ந்து சந்திக்க திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
இது காங்கிரஸ் கூட்டணியை உடைத்து, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை வலுப்படுத்தும்.
இதனால் சமீபத்தில் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்று, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராகுல் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார் என்பதோடு, இதன் மூலம், இந்திய அரசியலில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.