சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் இரைப்பை, குடல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநராக பணியாற்றிய மருத்துவர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்.
62-வயதான மருத்துவர் சந்திரமோகன், 1985-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகள் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜிவ் காந்தி மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், தேசிய அளவில் செயல்பட்டு வரும் உணவுக்குழல் பாதை துறை அமைப்பின் தலைவராக இருந்தார். கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த மருத்துவர் சந்திரமோகன் ஓய்விற்கு பிறகும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல மருத்துவர் சந்திரமோகனின் மறைவுக்கு மருத்துவத்துறையை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.