அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருகிறது, இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார்?
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் பிரபல தொழில் அதிபரும், அமெரிக்காவின் 9-வது மிகப்பெரிய பணக்காரருமான 77 வயதான மைக்கேல் புளூம்பெர்க் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் களம் காண இருக்கிறார்.
புளூம்பெர்க்கின் சாதனை, தலைமை மற்றும் மாற்றத்தை உண்டாக்குவதற்கு மக்களை ஒன்றிணைக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் டிரம்பை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும்” என கூறப்படுகிறது. தொழிலதிபர், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சிறந்த நன்கொடையாளர் என பல்வேறு முகங்களை கொண்ட மைக்கேல் புளூம்பெர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் கோடியாகும் .
இது ஜனாதிபதி டிரம்பின் சொத்து மதிப்பை விட 17 மடங்கு அதிகமாகும். ஆரம்ப காலத்தில் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த இவர் தனது பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கி தொழில்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். ஜனநாயக கட்சியில் இணைந்து தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கிய இவர், 2001-ம் குடியரசு கட்சிக்கு தாவி நியூயார்க் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்ற இவர் 2012-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை நியூயார்க் நகர மேயராக பதவி வகித்துள்ளார்.
இதற்கு முன் இவர் பலமுறை போட்டியிட விரும்பினாலும், பணபலம் படைத்த ஒரு தொழிலதிபரை மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவும் கூறபட்டது . ஆனால் இப்போது அவருக்கு அந்த தயக்கம் இல்லை. ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராவார். எனவே டிரம்பை போல் தனக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் மைக்கேல் புளூம்பெர்க் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார். ஒருவேளை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக புளூம்பெர்க் அறிவிக்கப்பட்டால் கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்தமுறை போட்டி கடுமையானதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.