நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவக் காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேகம் மாறுபாடு காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவிரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட அரபிக்கடல், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.