தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை தமிழகம், புதுவையில் இயல்பை விட 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், சென்னையில் இதுவரை 41 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.