தமிழகத்தில் 5 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு குமரிக்கடல், வட தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version