சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநில அரசு மிகுந்த தீவிரம் காட்டியது. ஆனால் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில், மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றி மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டுமென்று அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் மக்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் உறுதியாக இருந்த கேரள அரசு மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.