மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்தது. போக்குவரத்து மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிப் பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தி வருகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வேலை நிறுத்தம் முழுவீச்சில் நடைபெறுகிறது. குறிப்பாக கேரளாவுக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழக மாவட்டங்களிலும் இந்த வேலை நிறுத்தம் முழு தோல்வி அடைந்துள்ளது. கோவையைப் பொறுத்தவரையில், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் எந்தத் தடையுமின்றி ஓடுகின்றன. அதுபோல், வங்கிகள், அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படுகின்றன. நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறுவதற்கான எந்த அறிகுறிகளும் தமிழகத்தில் தென்படவில்லை.