மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் மத்திய தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை மத்திய தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் ஜப்பான் நிதிக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அருகே 325 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதற்காக முதல்கட்டமாக மத்திய அரசு ஆயிரத்து 263 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை சஞ்சய் ராய் தலைமையிலான 16 பேர் கொண்ட மத்திய குழுவினர் மற்றும் 7 பேர் கொண்ட ஜப்பான் நிதிக் குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தமிழக அரசு மருத்துவ இணை இயக்குநர் சபிதா, மதுரை அரசு ராஜாஜீ மருத்துவ கல்லூரி முதல்வர் வினிதா ஆகியோர் இந்த ஆய்வின்போது இருந்தனர். இங்கு 750 படுக்கை வசதிகளும், 16 அறுவை சிகிச்சை கூடம், 100 மருத்துவ மாணவர் சேர்க்கை, 60 செவிலியர் சேர்க்கை என பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் வகையில் அமைய உள்ளது. எய்ம்ஸ் அமைவிடத்தில் திருமங்கலம் மின் நிலையத்திலிருந்து துணை மின் நிலையம் தோப்பூர் அருகே அமைய உள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தண்ணீர் வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version