மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 2019ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினரிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நூற்பாலை சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், “செயற்கை இழையை பொருத்தவரை ஜிஎஸ்டியை18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கு 9,000 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் தொழில் செய்ய முடியாத நிலை நிலவுவதாக தெரிவித்துள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்கள், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். வருமான வரி உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.