மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாயும், ரயில்வே துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பியூஷ் கோயல், சிறுகுறு தொழில் முனைவோருக்கு 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார். ராணுவ வீரர்களின் ஒரே பதவி, ஒரே ஊதியத்திற்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரயில்வே துறைக்கு 65 ஆயிரத்து 587 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உலகிலேயே நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்த பியூஷ் கோயல், நாளொன்றுக்கு 27 கிலோ மீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஆளில்லா லெவல் கிராசிங் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் விமானத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் இணையதள பயன்பாட்டின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். நாட்டில் படப்பிடிப்பு நடத்த ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்த அவர், திருட்டு விசிடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் கூறினார்.