நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதியறிக்கையினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள நிலையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்று காலை இந்திய பங்கு சந்தைகள் தொடங்கியதும், சென்செக்ஸ் 98 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. பின்னர் படிப்படியாக 104 புள்ளிகள் வரை அதிகரித்து 36 ஆயிரத்து 367ஆக இருந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 867 ஆக இருந்தது.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டினை நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்ததும் சென்செக்ஸ் புள்ளிகள் கிடுகிடுவென 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 36 ஆயிரத்து 775 ஆக உள்ளது. அதேபோல் நிப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்து 10 ஆயிரத்து 982 ஆக உள்ளது. மத்தியில் பாஜக அரசின் கடைசி நிதியறிக்கையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். அதில் பல தரப்பட்ட மக்களுக்கு சலுகைகளை அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய பங்கு சந்தை 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதியறிக்கை பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிரதிபலிப்பே பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.