பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இதுவரை 6 கோடி பேருக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 8 கோடி இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். பணிப்புரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்த சிறுதொழில் நிறுவனங்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என்றும், நாட்டில் போலியாக செயல்பட்ட 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார். 13 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10 லட்சம் கோடி மதிப்புடையதாக உயரும் என தெரிவித்த பியூஷ் கோயல், ஓய்வூதிய திட்டத்திற்கு மாதம் 100 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். தன்வசம் உள்ள இரண்டாவது வீட்டை வாடகைக்கு விடும்போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு 1.8 லட்சம் ரூபாயில் இருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்படுவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். வாடகை மூலமான வருமானத்திற்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.