ஆம்பன் புயல் 195கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் என மத்திய அரசு எச்சரிக்கை!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியுள்ள நிலையில், 20ம் தேதி கரையை கடக்கும் போது, மேற்கு வங்க கரை ஓரம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவாகி, நேற்று சூப்பர் புயலாக மாறியது. ஆம்பன் புயல் தற்போது அதிதீவிரம் ஆகி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 20ம் தேதி மிகவும் கடுமையான சூறாவளி புயலாக உருவெடுத்து மேற்கு வங்காளம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது 195 கிலோ மீட்டர் வேகத்தில் அதிபயங்கர காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பன் புயல், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதங்களை ஏற்படுத்தும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆம்பன் புயலால், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் முன் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சூறாவளி செல்லும் பாதையில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version