தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரிகள் தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளன. இதில் மத்திய அரசு 60 விழுக்காடும் மாநில அரசு 40 விழுக்காடும் பங்களிப்பைச் செலுத்தும். மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் தனித்தனியாகப் புரிந்துணர்வு உடன்பாடு தயாரித்து விரைவில் அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.