கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கம் திருப்தியாக உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. இதையடுத்து புயல் பாதித்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளை சரிசெய்ய இழப்பீடுகளை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு அளித்த விளக்கம் திருப்தியாக உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.