இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடித்தில், இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதற்காக மத்திய அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி 93 சதவீதமாக இருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் 2-வது மற்றும் 3ஆவது கட்டமாக 13 நகரங்களில் 51 பி.பி.ஓ.க்களை அமைக்க உள்ள மத்திய அரசு திருச்சி, மதுரை உள்பட்ட 2-ம் கட்டப் பெருநகரங்களை மையமாகக்கொண்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பி.பி.ஓ. திட்டத்தால், தமிழகத்தில் நேரடியாக 8,387 பேருக்கும், மறைமுகமாக 16,477 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய பி.பி.ஓ. திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்கவேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.