அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்ததை அடுத்து, தபால்துறை துறை தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. அஞ்சல் துறை தேர்களுக்காக, கடந்த மே 10ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில் அதிமுக சார்பில் இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது. இதனால், ஜூலை 14 ம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், மீண்டும் மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அஞ்சல் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் அறிவிப்பு தொடரும் என்று புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.