தமிழக அரசுக்கு 12 விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு

ஊராட்சி அமைப்புகளில் சிறந்த முயற்சிகள் மற்றும் சீரிய நடவடிக்கைக்காக, தமிழக அரசுக்கு மத்திய அரசு 12 விருதுகளை வழங்கியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கிய பணிகளான, அடிப்படை சுகாதாரம் மற்றும் கட்டமைப்புக்கான நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் நிர்வாகம் ஆகியவை தொடர்பான பணிகளில் சிறந்து விளங்கும் மாநிலமாக, தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமரிடமிருந்து, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார். இதுதவிர மாவட்ட அளவில், சிறந்து விளங்கும் பஞ்சாயத்துக்கான விருதை சேலம் மாவட்டம் பெற்றது. மேலும், ஆறு ஊராட்சிகள் உள்பட, ஒன்பது கீழ்நிலை உள்ளாட்சி அமைப்புகளுக்குமாக, மொத்தம், 12 விருதுகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளில் 10 விதமான தகவல் தொழில் நுட்ப சேவைகளை பாராட்டி, “இ – புரஸ்கார்” விருதை தமிழகத்துக்கு மத்திய அரசு தந்துள்ளதாக கூறினார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மத்திய அமைச்சரிடம் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இயந்திர உற்பத்திப் பொருள்களின் ஜி.எஸ்.டி வரியினை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும், 14 ஆவது மத்திய நிதி ஆணையத்தின் 2019-20 ஆம் ஆண்டிற்கான 4ஆயிரத்து 345 கோடி அடிப்படை மானியத்தொகையை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளது.

Exit mobile version