ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை இந்தாண்டே வழங்க முடியாது – மத்திய அரசு

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை இந்தாண்டே வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இந்தாண்டே வழங்க முடியுமா? என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்குகளில் இன்று பதிலளித்துள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 50 சதவீத இடங்களை இந்தாண்டே வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. 50 சதவீதம் மற்றும் 27 சதவீத இடஒதுக்கீடு என எதையும் இந்தாண்டு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற, வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Exit mobile version