சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க, நிலங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும்பட்சத்தில், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா எதிரொலியாக கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து நிறுவனங்களும் தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றன. குறிப்பாக, சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களின் இருப்பிடத்தை வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளன. அவ்வாறு சீனாவில் இருந்து நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில், அவற்றை ஈர்க்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அந்நிறுவனங்களுக்கு போதுமான இடவசதி செய்து தர மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வெளிப்படையாகவும், விரைவாகவும் நிலத்தை கையகப்படுத்துவது அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க உதவும் என, Barclays வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கருத்து தெரிவித்துள்ளார். மின்சாரம், நீர் மற்றும் சாலை வசதிகளுடன் நிலங்களை வழங்குவது புதிய முதலீடுகளை ஈர்க்க பெருமளவில் உதவும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க, நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டர் நிலங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தற்போதுள்ள 1,15,131 ஹெக்டேர் தொழில்துறை நிலங்களும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின்னணுவியல், கனரக பொறியியல், சூரிய உபகரணங்கள், உணவு பதப்படுத்துதல், ரசாயனம், ஜவுளி உள்ளிட்ட 10 துறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே வேளையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நிறுவனங்களை இடமாற்றம் செய்வது குறித்தும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா மற்றும் சீனா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களுடன், தென்னிந்திய மாநிலமான ஆந்திரா, மிக நெருங்கிய தொடர்பில் உள்ளது.
இது தொடர்பாக பேசிய அம்மாநிலத்தின் சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் தாங்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், முதலீட்டாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதேபோல, அனைத்து மாநிலங்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உரிய திட்டங்களை வகுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விரிவான திட்டம் இந்த மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் தொழில் தொடங்கும் பட்சத்தில், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதன்மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள். பொருளாதார சரிவில் இருந்து இந்தியா மீளவும் அது உதவும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.