வருமான வரி பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் மசோதா மத்திய அரசு ஒப்புதல்

வருமான வரி பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடி வரிகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்வு காணும் வகையிலான மசோதாவை பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருந்தது.

இந்த மசோதாவில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடர்பான பிரச்னைகளுக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காணும் நோக்கில் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், கடன் மீட்புத் தீர்ப்பாயங்களில் நேரடி வரிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், நேரடி வரிகள் தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளோர் மார்ச் 31ம் தேதிக்குள் அவற்றின் மீது தீர்வு காண வழிவகை ஏற்படும் என்றும்,  நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் தீர்வு காணத் தவறுபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறினார்.

Exit mobile version