சென்னை விமான நிலையத்தில் மத்திய பேரிடர் அதிகாரிகள் ஆய்வு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய தேசிய பேரிடர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இரண்டரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வின் போது, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை மத்திய தேசிய பேரிடர் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆய்வின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக மத்திய பேரிடர் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். தமிழக அரசின் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் எல்லா பொது இடங்களிலும் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். ஆயினும், பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கருதப்படும் 16 மாவட்டங்களில் மட்டும் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version