தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள், டெல்லியில் இருந்து நாளை சென்னைக்கு வருகிறது.
டெல்லியில் இருந்து நாளை பகல் ஒரு மணிக்கு சென்னை வரும் இந்த குழுவினர், பிற்பகல் 3.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
வரும் 6ம் தேதியன்று, முதல் குழுவினர், தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி செல்கின்றனர்.
தொடர்ந்து இந்த குழு ஏழாம் தேதி திங்கட்கிழமை காலை, புதுச்சேரி மாநிலத்தில் ஆய்வை முடித்துவிட்டு, பிற்பகலில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை ஆய்வு செய்துவிட்டு, இரவில் சென்னை திரும்புகின்றனர்.
ஆறாம் தேதி ஞாயிறு அன்று, இரண்டாவது குழு வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.
இந்த குழு ஏழாம் தேதி திங்கட்கிழமை காலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, மாலையில் சென்னை திரும்புகின்றனர்.
எட்டாம் தேதி காலை, அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் புயல் சேதம் குறித்து கலந்தாலோசித்த பின், பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் ஆலோசணை நடத்துகின்றனர்.
அதனைதொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மத்திய குழவினர் டெல்லி திரும்புகின்றனர்.