கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை மத்திய குழு கடந்த 24-ம் தேதி முதல் நேரில் சென்று ஆய்வு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை பதுச்சேரிக்குட்பட்ட காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர். புதுவை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், காரைக்காலில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒருவாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.