செல்போன் கொள்ளை வழக்கு – 11 பேரை பிடிக்க வடமாநிலம் விரைந்த தனிப்படை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை என்னுமிடத்தில் கடந்த அக்டோபர் மாதம் மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை மடக்கிய மர்ம கும்பல், அதிலிருந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தது.

மர்ம நபர்களை பிடிக்க 4 காவல் ஆய்வாளர் தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் வட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், அபிதாபா தத்தா, பரத் தேஜ்வாணி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ராஜேந்தர் என்பதும், தெரியவந்தது.

கைதானவர்களிடமிருந்து 4 லாரிகள், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

Exit mobile version