செல்பேசி அழைப்பின் போது மணி ஒலிக்கும் நேரத்தை ஜியோ நிறுவனம் 20 நொடிகளாகக் குறைத்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஜியோவின் மீது ஏன் குற்றம் சாட்டுகிறது ஏர்டெல்?
இந்தியாவில் உள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அழைப்பு மணி ஒலிக்கும் நேரத்தை 45 நொடிகளுக்கு வைத்திருக்கும் போது ஜியோ வெறும் 20 நொடிகள் மட்டுமே வைத்துள்ளது. இதன் காரணமாக அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் தவறிய அழைப்பைப் பெறுகின்றனர்.
உதாரணமாக ஏர்டெல் வலையமைப்பில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுத்தால் அது 20 நொடிகள் மட்டுமே மணி ஒலிக்கும். இந்தக் குறைவான நேரத்தில் 30 சதவீதம் பேர் மிஸ்டு கால் பெறுவார்கள். மிஸ்டு கால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர் திரும்ப அழைப்பு விடுப்பார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.
விதிகளின் படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம் எதிர் நிறுவனத்திற்கு IUC கட்டணமாக 6 காசுகள் கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ வலையமைப்பில் பதிவாகும் 25 முதல் 30 சதவீத மிஸ்டு கால்களின் மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. இதன் வாயிலாக ஜியோ தற்போது மொத்தம் 65 சதவீத டெலிகாம் டிராபிக் -ஐ தன் வசம் வைத்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டுகிறது.
ஏர்டெல்லின் குற்றச்சாட்டை மறுக்கும் ஜியோ 30 நொடிகள் அழைப்பு மணி ஒலிப்பதுதான் இந்தியாவில் கடைப்பிடிக்கும் முறை எனக் கூறுகிறது. உலக அளவில் பெரும்பாலான நிறுவனங்கள் 15 முதல் 20 நொடிகளுக்கு தான் அழைப்பு மணி ஒலிக்கும் நேரத்தை வைக்கின்றன. ஜியோ வலையமைப்பில் வரும் அழைப்புகளில் 25முதல் 30 சதவீத அழைப்பு மிஸ்டுகால்கள்தான் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் இரண்டு பெரு நிறுவனங்களும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.