திருப்பரங்குன்றத்தில் தெற்கு பகுதி வியாபாரிகள் மற்றும் காவல்துறை இணைந்து பெரிய கடை வீதியில் அமைத்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலக அளவிலும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். திருவிழாக் காலங்களில் இங்கு கூட்டம் அலைமோதும் என்பதால் பல்வேறு குற்றச் செயல்களுக்கு வழிவகுத்து வந்தது.
இந்நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகவும் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் தெற்குப்பகுதி வியாபாரிகள் சங்கம் சார்பில் காவல்துறையினருடன் இணைந்து பெரிய கடைவீதியில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வியாபாரிகள் சங்கத்தினரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். இதன்மூலம் கொள்ளை சம்பவங்கள் பெரிய அளவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.