பாதுகாப்பான மாநகராக உருவாக்கும் நோக்கில் சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகர கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த செய்தியாளர்களின் சந்திப்பின்போது, சென்னையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தற்போது வரை சென்னை மாநகரம் முழுவதும் 80 சதவிதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், குற்றவாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா உதவியாக உள்ளது என்றும் கூறினார்.
பிப்ரவரி மாதத்திற்குள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, 100 சதவிகித இலக்கை எட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தினகரன் கூறினார்.