CBSE 10ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பெண் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கேள்வி இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், CBSE 10-ம் வகுப்பு தேர்வில் பெண் விடுதலைக்கு எதிரான கேள்வி இடம்பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார். பெண் விடுதலையை அவமதிப்பது, பெண் விடுதலைக்காக பாடுபடுவோரை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்த செயலை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மத்திய-மாநில அரசுகளின் கொள்கைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். தற்போது, அந்த வினா நீக்கப்பட்டு முழு மதிப்பெண் வழங்கப்படும் என்பது, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்றது என கூறியுள்ளார்.
வினாத்தாள் தயாரிக்கும் முன், சர்ச்சைக்குரிய கருத்து இருக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு சிபிஎஸ்இ-க்கு உண்டு என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.