கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில் ஒத்தி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். டெல்லியில் விடுபட்ட சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் சானிடைசர்கள் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என்றும், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் விடைத்தாள்கள் காலை 10 மணி முதல் 10.15 வரை விநியோகிக்கப்படும் என்றும், வினாத்தாள்கள் காலை 10.15 மணிக்கு தேர்வர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வினாத்தாள்களை வாசித்து புரிந்து கொள்ள 15 நிமிடங்கள் நேரம் வழங்கப்படும் என்றும், காலை 10.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.