சிபிஎஸ்இ "சர்ச்சைக்குரிய கேள்வி" பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்

10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ‘பெண் விடுதலை’ தொடர்பான கேள்விக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கம் செய்துள்ளது. 

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, முதலாம் பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற ஆங்கில பாடத் தேர்வில், பெண் வெறுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் ஒரு வினாவாக கேட்கப்பட்டது.

அந்த வினாவில், ‘மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள் என்றும், அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம் பெண் விடுதலை தான் என்றும் குறிப்பிடப்பட்டு, அதன் மீதான கருத்து கேட்கப்பட்டுள்ளது.

சமூக பிரச்னைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கருத்து கேட்பு கேள்விகளும் இடம்பெற்றன. இது, மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது குறித்து பேசிய பிரியங்கா காந்தி, பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்துக்களை மத்திய அரசு ஆமோதிக்கிறது என்பது தெளிவாகிறது என்று சாடியுள்ளார்.

பெண் விடுதலை தொடர்பான சர்ச்சைக்குரிய வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்தில் கேட்கப்பட்டதற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்விநேரத்தின்போது பேசிய அவர், பெண் விடுதலை தொடர்பான சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம்பெற செய்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கேள்வி எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருந்த ‘பெண் விடுதலை’ தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நிர்வாகம் நீக்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு இடம்பெற்றதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

Exit mobile version