நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில்,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஜூன்1 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்கள் மீதான சுமையை குறைக்கவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்கள் மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இந்த சமயத்தில் பொதுத்தேர்வுகள் நடத்துவது சரியாக இருக்காது எனக் கூறியுள்ளார்.
மேலும், இது போன்று பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு, மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.