மேற்கு வங்க அரசுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்குகளில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மமதா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி, கமிஷனர் ராஜீவ் குமார் ஆகியோர் மீது சிபிஐ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டது, நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ-க்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காதது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.