சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்தனர். ஆனால், அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கான போதிய ஆவணங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பி மாநில போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ் குமாரை கைது செய்ய தடை விதித்தது. இந்நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.