தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடங்களில் செல்போனில் நடைபெற்ற அழைப்புகள் மற்றும் உரையாடல்கள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் காயமடைந்தனர். இதுதொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடியில் சி.பி.ஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மெயின் ரோடு பகுதி, 3-வது மைல் மேம்பாலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பயன்படுத்திய நபர்களின் பட்டியலை டாம் டவர் கருவி மூலம் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.