சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாமல் மேற்கு வங்க அரசு மற்றும் போலீசார் தடுப்பதாக உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடி உள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ஒத்துழைக்க வேண்டும் என்று மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பல முறை வலியுறுத்தியும் கொல்கத்தா காவல் ஆணையர் மறுப்பதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. சிபிஐ மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.