சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.ஐ. தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில், சி.பி.ஐ. விசாரிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உட்பட மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், சாத்தான்குளம்-தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து, சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிபிஐ-யிடம், வழக்கு விவரங்களை, விரைவில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அரசு சாட்சியாக மாறிய காவலர் ரேவதியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வழக்கில் கைதான மேலும் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரிசோதனைக்குப் பின், எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 3 காவலர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 காவலர்களுக்கும், வரும் 23ம் தேதி வரை, 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி, நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து, சிகிச்சையில் உள்ள காவலர்கள் தவிர, மற்ற 3 காவலர்களும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.