CBF 2019 – எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் மனநிலை என்ன ?

42 வது சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது பற்றிய கட்டுரை இது,

குவிந்து கிடக்கும் புத்த கடலில் எந்த மாதிரியான புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதே முதல் தலைமுறை வாசகர்கள் எதிர்கொள்ளும் முதலாவது சிக்கல். அது குறித்த விழிப்புணர்வை கண்காட்சி மேடை நிகழ்வின் போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் வாசகர்கள்.

புதிய புதிய தலைப்புகளில் புதிய புதிய நூல்கள் அதிகம் வரும் சூழலில், இதுவரை தமிழில் இல்லாத நூல்களைத்தான் எழுத விரும்புவதாகவும், அடுத்த தன் படைப்பு பற்றியும் சொல்கிறார் எழுத்தாளரும் ஐ.டி ஊழியருமான குகன்

விற்பனையாளராகவும் இருப்பதால், சந்தையில் இல்லாத அதே சமயம் தேவையானவை என்ன என்பதையும் கவனிக்க முடிகிறது. சிபிஐ குறித்து தமிழில் நூல்கள் இல்லை. அடுத்ததாகக் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து எளிய மக்களும் புரிந்துகொள்ளும் விதமாக எழுத வேண்டும் என்றார்.

இலக்கிய உலகில் இன்னுங் குறிப்பாக எழுத்துலகின் கலகக்காரராக அறியப்படுகின்ற சாருநிவேதிதாவிடம் பேசியபோது,
சிறுகதை, நாவல் போன்ற வகைகள் அதிகரித்துள்ளதாகவும், பயணக்கட்டுரைகள் முன்னளவுக்கு எழுதப்படவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. தமது துருக்கி பயணத்தை நிலவு தேயாத தேசம் என்ற பெயரில் பயணக் கட்டுரையாக எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாடமி பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது,
புத்தகக் கண்காட்சிக்கு அதிகம் பெண்களும் வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், பெரும் வரவேற்பைப் பெற்ற 1001 இரவுகள், உலக இலக்கியப் பேருரைகள் போல பெரியாரின் பரிமாணங்கள் குறித்து ஒரு பேருரையை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிகழ்த்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட இக்காலகட்டத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமும் எதிர்பார்ப்பும் . அதற்கு இத்தகைய புத்தக கண்காட்சிகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Exit mobile version