CBF- 2019 எப்படி இருக்கிறது புத்தகத் திருவிழா ? – ஒரு எழுத்துச் சுற்றுலா

பாதங்கள் நகராமல் ஒரு பயணம் போக முடியுமென்றால் அது புத்தகங்களால் மட்டுமே சாத்தியம்

                                                                                                                               – ஜும்பா லஹிரி

 

42 வது சென்னை புத்தகத் திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. கொண்டாட்டங்களுக்கு குறைவேதுமில்லாமல் நூல்நயம் பார்க்கும் நுகர்வோர்கள் பலர் சந்தித்துக்கொள்ளும் இந்த இன்பப்பெருவிழா இந்தாண்டு 17 நாட்கள் நடைபெற இருக்கிறது. 

வாருங்கள் புத்தகங்களோடு புத்தாண்டையும் பொங்கலையும் கொண்டாடுவோம்.

 

நூல்கள் தோன்றியது எப்படி?

காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்த மனிதன் ஏனோ யோசிக்கத் தொடங்கினான். யோசனைகள் அனுபவம் குறித்து அவனை அறியச்செய்தன. தன் அனுபவங்களின் வாயிலாக அறிந்துகொண்டவற்றை எதிர்வரும் தலைமுறையும் எளிதாக அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிய எண்ணம்தான் மனிதன் போதிக்கும் முறையைக் கண்டறிந்ததன் பிண்ணனி. அதன் தொடர்ந்த போதனைக்கு தேவை தொலைந்துவிடாத தரவுகள் என்பதை நீண்டகால அனுபவத்திற்குப் பிறகு அறிந்துகொண்டதன் விளைவாகத்தான் நூல்கள் தோன்றின.

ஆம். நூல்கள் வெறும் காகிதக் கட்டுகள் அல்ல. அவை அனுபவத்தின் தொகுப்புகள். நீங்கள் பாதங்கள் அசையாமல் ஒரு பயணம் போக முடியுமென்றால் அது புத்தகங்களாலேயே சாத்தியம் என்கிறார் ஜும்பா லஹிரி. இந்த உலகம் முழுமையும் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள் தொடங்கி உங்கள் உள்ளூர் ஹைக்கூ கவிஞன் வரையில் அவரவர்களின் இருப்புக்கு காரணம் அவர்களின் வாசிப்பில் வழிபட்ட நூல்களே.

புத்தகத் திருவிழா :
எய்பவனைப் பொறுத்து அம்பின் வேகம் வேறுபடுதலைப்போல் படிப்பவனைப் பொறுத்து புத்தகத்தின் வீரியம் மாறுபடுகிறது. வாசகனுக்கு இப்படியொரு நெகிழ்வைத் தராத எந்த நூலும் பரந்த வெகுஜனம் முன்பு நின்று பிடிப்பதில்லை . அப்படி இருந்ததால் வெகுஜனம் வெறுத்து ஒதுக்கி கடைசியில் இல்லாமலே போய்விட்டவை ஏராளம்.

ஆனால் தமிழ் வாசகர்கள் இதைப் பொய்யாக்கி வருகிறார்கள் என்பதைப் புரியவைக்கிறது சென்னை புத்தகத் திருவிழாக் கொண்டாட்டங்கள். புதுப்புது வாசகர்கள் நாள்தோறும் பெருகிவருவதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. குழந்தைகளும் விரும்புவதாக , பெரியவர்களும் விரும்புவதாக இருப்பதுதான் இதன் பெரும் வெற்றி.

உலகமே படிக்கிறது. இதிலென்ன என்றால் உலகமே படிக்கிறது ஆனால் தமிழ்சமூகம் படித்ததை பயன்படுத்துகிறது. இந்தியா முழுக்க நீங்கள் தேடிப்பார்க்கினும் தமிழுக்கு மட்டுமே நிரந்தர புத்தகக்கண்காட்சி என்றொன்று பார்க்கமுடியும். நாளுக்குநாள் துடிப்பான இளைஞர்கள் அதிகம் வாசகர்களாகிறார்கள் என்பதே இந்த பெருமைக்கான காட்சி குறியீடு.

இலக்கியம் என்றபடிக்கும் நூல்கள் வாசிப்பு என்றபடிக்கும் அது தலைநரைத்தவர்களின் கூடுகையின் போது நேரப்போக்கிற்கு பயன்படும் கூடுதல் வஸ்து என்ற எண்ணம் இந்த தலைமுறையில் இல்லை. வெறும் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரியும் இலக்கியவாதிகளாகவோ படைப்பாளிகளோ இப்போது குறைவு. இதை முந்தைய தலைமுறையின் போக்கில் சொல்வதனால்

முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டு
புத்திகெட்டுப் போனதொரு காலம் – இங்கே
ரத்தமற்றுபோனபின்பு ஞானம்.
                               என்கிற கண்ணதாசன் வரிகள் இதற்கு கட்டியங்கூறும்.

ஆனால் இப்போது அப்படியில்லை. எழுத்தாளன் கொண்டாடப்படுவான். இலக்கியம் கொண்டாடப்படும். வரலாறு தேடப்படும் என நாளைய தலைமுறை நம்பிக்கை தந்து கடந்த காலத் தலைமுறைக்கு கண்ணீர் துடைக்கிறது இளைஞர்கள் புடைசூழ இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழா.

சூழல் அமைப்பு :

உணவுத்திருவிழா நடப்பதற்கென்றொரு பிரத்யேக அரங்கவரிசையோடு மேலும் கிருஷ்னா ஸ்வீட்ஸ் நிறுவனம் அமைத்திருக்கும் உணவுக்கூடம் என மைதானம் முழுக்க மணமணக்க, எப்போதும்போல வனப்பு மாறாத விழா மேடையொன்று நேரெதிராக (புத்த்க அரங்கிற்கு இடப்புறம் பார்த்தபடி ) அமைந்திருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்களும், நல்லி குப்புசாமி அவர்களும் தமக்கே உரியபாணிகளில் உரையாற்றி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வளைவு வாயில் வழியே உள்ளே நுழைகிறோம்.

42 ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் 42 ம் ஆண்டு புத்தகத் திருவிழாவான இன்று (04.01.19) கிராமத்துப் பொங்கல் போல வெகு விமரிசையாக ஏற்பாடுகள் நடக்க, “வாசிப்பை வாழ்க்கையாக்குவோம்” என்ற வாசகத்தோடு வரவேற்றது வாயில்வளைவு.

எப்படி ரசிக்கிறார்கள் :
மாலை 6.30 க்குத்தான் கண்காட்சி தொடங்கும் என்றபோதும் 2 மணிக்கே வந்து காத்திருந்த வெளியூர் இளைஞரைப் பார்க்கமுடிந்தது. பரபரப்பாக 820 அரங்குகளும் இயங்கிகொண்டிருந்தது. வாசகர்களுக்கு புத்தகங்களை வாசிக்கத் தருவது எழுத்தாளன் வேலை என்றால், ரசிக்கத் தருவதுதான் இந்த அரங்குகளின் வேலை போலும். கண்டு,கேட்டு ,உண்டு உயிர்த்து உற்றறியும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் புத்தகக் கண்காட்சி அதற்கான சிறந்த இடம் என்றே படுகிறது. கண்டதும் ரசிக்கும் வண்ணம் கண்கவர் வடிவங்களில் அடுக்கப்பட்டிருக்கும் அழகை ரசிக்கத் தொடங்கினால் தோள் கண்டார் தோளே கண்டார்தான்.

நேராக இருக்கும் கடைவரிசைகளில் காதுகுளிரக் கேட்கிறது சில புத்தகங்களையும் பதிப்பகத்தையும் தேடி வந்து திரியும் இளைஞர்கள் சிலரின் குரல். அழுத்தமாக கேட்கப்படும் அந்த புத்தகத் தலைப்புகள் காதில் பாய்ந்து கண்வழிக் காட்சியாகின்றன. ஏடிஎம் எந்திரத்தின் பணமெண்ணும் ஒலி எப்படி மகிழ்வூட்டுமோ அதேபோல, இந்த இடத்தில் இதைவிட மகிழ்வூட்டும் சப்தம் வேறொன்றிருக்காது.

வாசகர்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வர்கள் அல்லது தங்களுக்கான வாசகர்களை நூல்களைத் தேர்ந்தெடுக்குமென்பார்கள். இங்கே நூலைத் தேடும் வாசகன். வாசகனை இழுக்கும் நூல்கள் என இரண்டையும் காண முடிவது மகிழ்ச்சி.

சுடச்சுட :
தொடராக வந்தபோது படித்திருந்தாலும் தொகுப்பாக வந்தபோதும் படிக்கவேண்டும் என்கிற வாசகர்களெல்லாம் எழுத்துலகின் இரண்டாம் பிரம்மாக்கள். அண்மையில் வெளிவந்த சு.வெங்கடேசனின் எழுத்தில், ம.செ வின் ஓவியங்களுடன் வாசகர்களை ஒரு வழியாக்கிய வேள்பாரி விகடனில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்து எல்லோர் மனதிலும் இறங்கி ஒரு ஆட்டம் ஆடியிருக்கும் “96” திரைப்படத்தை மையமாக வைத்து எழுதபட்ட தனிப்பெருங்காதல் எனும் நூல் உயிர்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தேடித்தேடி தகவல்களை வாரி இறைத்திருக்கும் கோமல் அன்பரசனின்“ரகசியமான ரகசியங்கள் ” தினத்தந்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. எப்போதும் தனக்கென தனிச்சந்தையை உறுதிசெய்து கொள்ளும் ஆங்கில நூல்கள் இந்த ஆண்டும் வெகு தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன. பெரியார் இன்றும் என்றும் , அம்பேத்கர் இன்றும் என்றும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக இளைஞர்களால் வாங்கப்பட்ட வரிசையில் இந்த ஆண்டு மார்க்சியம் இன்றும் என்றும் என மூன்று தொகுப்புகளாக விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.தமிழின் செவ்வியலுக்கு எப்போதும் மவுசு இருப்பதைபோலவே ஆங்கிலத்திலும் புதுவரவுகள் ஆயிரமிருந்தாலும் பொதுவாக எல்லா ஆங்கில அரங்குகளிலும் சேக்ஸ்பியரும் , ரோல் தாலும் நம்மை வரவேற்பதைக் காண முடிகிறது. இவைகளோடு மட்டுமலாமல் பெரும் பெயர் பெற்ற எழுத்தாளர்களும் சரி, தவமாய் தவமிருந்து முதல் நூல் வெளியிட்டவரும் சரி தங்கள் படைப்பின் சந்தைத் தரத்தைக் உரசிப்பார்க்கும் உரைகல்லாகவே இந்த சென்னை புத்தகக் கண்காட்சியைக் கருதுகிறார்கள்.

பதிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?

பதிப்பாளர்கள் சிலர் பேசும்போது, “” ஆரம்பத்தில் நூல்விற்பனை என்னவோ சவாலான தொழில்தான். ஏனெனில் விற்றுத்தீர்ப்பதில் சிரமம் இருந்தது. இப்போதெலாம் சவாலே வேறு. மாறுகிற ரசனைக்கு தோதாகவும், இளைஞர்களுக்கு வேண்டியபடியும் எழுதிமாளவில்லை. தொழில்போட்டிதான் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.இந்த தலைமுறை எதையும் இணையத்தில் தெரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருப்பதால் அவற்றையும் தாண்டி சிரத்தை எடுத்து நூல்களைப் படைக்க வேண்டிய கட்டாயம் எழுத்தாளர்களுக்கு வந்துள்ளது என்றும் சொல்கிறார்.

மொத்தத்தில் ஆரவாரமாக ஒரு அறிவுத்திருவிழா நடக்க முடியுமா என்றால் முடியும் என்றே பதிலளிக்க வேண்டும். கடந்த ஆண்டின் கடைசி நாளில் இன்னும் கொஞ்சம் நீட்டிக்க வேண்டி வந்த கோரிக்கைகளின் எதிரொளிதான் இந்த ஆண்டு நடக்கும் இந்த கண்காட்சி.

வரலாற்றைக் கொஞ்சம் கேட்டுப்பார்த்தால் அது தரும் தரவுகளின்படி 42 ஆண்டுகால கண்காட்சிகளில் 17 நாட்கள் நடைபெறும் மிகநீண்ட புத்தகக் கண்காட்சி இதுதானாம். முந்தைய ஆண்டுகளின் வரவேற்புதான் இதற்கு காரணம் என்கிற வார்த்தைக்குள் அடங்குகிறது தமிழுலகம் நூல் விரும்பிகளாகத்தான் இன்னும் இருக்கிறோம் என்பதற்கான நிரூபணம்.

முதல்நாளில் இப்படித்தானிருக்கிறது சென்னை புத்தகக் கண்காட்சி -2019. இனிவரும் நாட்களிலும் இதேபோல சந்திப்போம்

-தொடரும்

 

 

Exit mobile version