திமுக-வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திமுக உட்கட்சி மோதலில் கொலை நிகழ்ந்ததாக தெரியவந்தது. திமுக மாநில நிர்வாகி சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின் கிடுக்கிபிடி விசாரணையில் கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார்.
திமுகவில் கட்சி பதவி பெறுவதிலும், தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதிலும் இருந்த உச்சகட்ட மோதலே கொடூர கொலைக்கு காரணம் என்ற பகீர் தகவல் விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 25 சவரன் நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் கூலிப்படைக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வரும்நிலையில், மேலும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனி அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நெல்லை சென்ற அவர் கொலை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட திமுக பெண் நிர்வாகியின் மகன் கார்த்திகேயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பதவி மற்றும் அதிகார ஆசையில் திமுக உட்கட்சி மோதல் காரணமாக நடந்த மற்றொரு கொடூர கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.