காவேரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவேரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறையின் சேவா பவனில் நடைபெற்றது.
இதில் தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரை கர்நாடகம் முழுமையாக திறந்துவிடவில்லை என்று குற்றம் சாட்டிய தமிழகம், இம்மாத இறுதிக்குள் முழுமையான நீரை விடுவிக்க வலியுறுத்தியது. இதேபோல், ஜூலை மாதத்திற்குரிய 31.24 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. மேகேதாட்டு அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அது தொடர்பாக காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் தமிழகம் வலியுறுத்தப்பட்டது. காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களூரு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இனி வரும் காலத்தில் இதன் கூட்டங்கள் பெங்களூருவில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது.

இதையடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மழையளவு, நீர் இருப்பை பொறுத்து திறந்து விட வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version