காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு திருப்திகரமாக இருப்பதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 20-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். 4 மாநில பிரதிநிதிகளும் காவிரி நீர் தொடர்பான புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர். பின்னர் அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றன. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள வானிலை நிலவரம் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு திருப்திகரமாக உள்ளதாக அவர் கூறினார். நேற்றைய தேதி வரை பிலிகுண்டுலுக்கு வந்த நீரின் அளவும் திருப்தி அளிப்பதாக நவீன்குமார் தெரிவித்தார். அடுத்த கூட்டத்தில், நீரியல் விவரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.