“காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்!

தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவான “காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில், “காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் டிராக்டரில் வந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிராக்டரை ஓட்டி வந்தார்.

விழா மேடைக்கு செல்வதற்கு முன், காவல்துறையினருடைய மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி, தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத்திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அதைத் தொடர்ந்து, 3 ஆயிரத்து 384 கோடி ரூபாயில் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளையும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராட்சத பொக்லின் இயந்திரங்கள் கொண்டு, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணியை, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வெற்றிவேல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு, மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார்.

Exit mobile version