காவிரி – கோதாவரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்பட்டு, உரிய காலத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நீர் பெற்றுத் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை. சரவணனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், காவிரி – கோதாவரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றி, உரிய காலத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நீர் பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் 200 டி.எம்.சி நீர் கூடுதலாக, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கிடைக்கும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்டாலினுக்கு அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயம் வந்துவிட்டது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிரசாரம் செய்த முதலமைச்சர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆசைமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் தனக்கு கூட்டம் சேரவில்லையென்று விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு, கும்பகோணம் கூட்டம் ஒரு சோறு பதம் போன்று உதாரணம் என்று தெரிவித்தார்.
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பெற அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியில் மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து வாக்குசேகரித்த அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றும் செய்யாத ஒரே கட்சி திமுக என்று குற்றம்சாட்டினார்.
மாநிலம் வளர கல்விக்கு அதிகளவில் பொருட்செலவு செய்யும் அரசு அதிமுக அரசு என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம், திருவையாறில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், தை பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது அதிமுக அரசு என்பதை சுட்டிக் காட்டினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றானது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கரந்தையில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆதரவாகவும், தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காந்திக்கு ஆதரவாகவும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், செய்யமுடியாத காரியங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிடும் ஒரே கட்சி திமுக என்று சாடினார்.
முத்தலாக் தடை சட்டம் நிறைவேறாமல் இருக்க அதிமுக அரசு கடுமையாக எதிர்த்தது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தஞ்சை, கீழவாசலில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஹஜ் மற்றும் ஜெருசலம் புனித பயணம் செல்ல நிதியுதவி அளித்து, சிறுபான்மையினருக்கு அரணாக இருக்கும் அரசு அதிமுக அரசு என்றார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்தும், தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காந்திக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மக்களுக்கு நல்ல திட்டங்களை பார்த்து, பார்த்து செய்யும் ஒரே கட்சி அதிமுக என்றார்.
அதிமுக அரசுதான் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று, தஞ்சை ஒரத்தநாட்டில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக அரசு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் த.மா.கா வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்குசேகரித்த முதலமைச்சர் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை செய்த ஒரே அரசு அதிமுக அரசு என்றார். இத்துடன் முதலமைச்சரின் பிரசாரம் நிறைவுற்றது.