காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் ஒருபகுதியாக, கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி ரவுண்டானா அருகே, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இதே போன்று, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.