ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணி வர்த்தனையை எளிதாக்கும் நோக்கில் தற்போது வழங்கப்படும் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகளில் இது போன்ற வைஃபை வசதிகளை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏ.டி.எம் எந்திரங்களை பயன்படுத்தினாலோ அல்லது கார்டை பயன்படுத்தி பொருள் வாங்கினாலோ ரகசிய குறியீட்டு எண் தேவையில்லை.
இது போன்ற வைஃபை வசதி கொண்ட ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தியவர் சென்னை சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (32) என்பவர் கடந்த 28 ஆம் தேதி அதேபகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் பணமெடுத்துவிட்டு ஏ.டி.எம் கார்டை மறந்து தவறவிட்ட நிலையில் 29 ஆம் தேதி அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இது தொடர்பாக மனோகரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.அதே போல அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பிரபு என்பவரும் தனது வைஃபை டெபிட் கார்டு தொலைந்து போனதாகவும் அதில் இருந்து 20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்ததாகவும் புகார் அளித்து இருந்தார்..இரண்டு புகார்களும் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டது.
உதவி ஆய்வாளர் ராஜாசிங் தவறவிட்ட ஏ.டி.எம் கார்டு மூலம் 25,000 ரூபாய் மற்றும் 20 ஆயிரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை வங்கியில் கேட்ட பொழுது இரண்டுமே கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
இதனையடுத்து போலீசார் விரைந்து அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று விசாரித்த போது ஒரு நபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கெஞ்சி வைஃபை கார்டு மூலம் 5ஆயிரம் ரூபாயாக பல முறை ஸ்வைப் செய்த போது சந்தேகத்திற்கிடமாக இருந்ததினால் அந்த நபரை புகைப்படம் எடுத்துவைத்ததாகவும், அவரிடம் கேட்ட பொழுது தனது நண்பருடைய டெபிட் கார்டு எனக்கூறியதும் அதனால் சந்தேகத்தில் அவருடைய செல்போன் மற்றும் இருசக்கர வாகன பதிவு எண் ஆகியவற்றை அங்கு பணிப்புரிந்த ஊழியர்கள் பதிவு செய்து வைத்துருந்ததை காண்பித்தனர். அந்த புகைப்படத்தை வைத்தும்,சிசிடிவியில் பதிவான முகத்தையும் வைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அடையாளங்களை வைத்தும் , இருசக்கர வாகன எண்ணை வைத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
வெளியான திடுக்கிடும் தகவல்கள்
அந்த தகவலின்படி, “மணிகண்டன் புரசைவாக்கம் துர்கா மேன்சனில் தங்கி சௌகார்பேட்டையில் உள்ள ஜுவல்லரி கடைகளுக்கு புரோக்கராக பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் ஏடி.எம் மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்களில் சிலர் ஏடி.எம் கார்டை மறந்து தவறவிட்டு செல்வது வழக்கம்.அதன் பின்னர் வரக்கூடிய நபர் அந்த ஏடி.எம் கார்டை ஓரமாக வைத்து செல்வார்.
இந்த ஏடி.எம் கார்டுகளை மட்டுமே மணிகண்டன் குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.குறிப்பாக அதிலும் வைபை ஏடி.எம் கார்டை மட்டுமே திருடி சென்று பெட்ரோல் பங்கில் அவசர தேவைக்காக பணம் வேண்டும் என கெஞ்சுவது போல் நடித்து பணத்தை பெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மேலும் வைபை ஏடி.எம் கார்டு என்பதால் சம்மந்தப்பட்ட நபருக்கு ஓ.டி.பி செல்லாமல் வைபை கார்டை காட்டி மட்டுமே எளிதாக பணத்தை கொள்ளையடிக்கலாம் என மணிகண்டன் தெரிவித்தார்.
மேலும் சேலத்தில் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை செய்யும் ஆச்சாரியாக பணிப்புரிந்து வந்ததும், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தத்தளித்து வந்ததால்சென்னையில் நகை புரோக்கராக செயல்ப்பட்டதும், எதிர்பாராத விதமாக ஒரு முறை தவறவிட்ட ஏடிஎம்மை பயன்படுத்தி பெட்ரோல் போடுவதிற்கு பயன்படுத்தியதும் யாரிடமும் மாட்டிகொள்ளாததால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் இருந்து 6 ஏ.டி.எம் கார்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைபை ஏடி.எம் கார்டை திருடி பல பெட்ரோல் பங்கில் மணிகண்டன் திருடியது விசாரணையில் தெரியவந்தது. வைபை ஏடிஎம் என்பதால் குறியீட்டு எண் தேவையில்லை என்பதால் இது போன்ற மோசடியில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பரிவர்த்தனையை எளிதாக்க இது போன்ற வைஃபை கார்டுகளை தனியார் வங்கிகள் வழங்குவதாக கூறும் போலீசார், வாடிக்கையாளரின் வசதி தான் வங்கியின் நோக்கம் என்றாலும் இது போன்ற வைஃபை கார்டுகள் மோசடி பேர்வழிகளின் வேலையை சுலபமாக்கி விடுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இது போன்ற டெபிட்/ கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனமுடன் பயன்படுத்துவதோடு கார்டு தொலைந்து போனால் வங்கிக்கு தகவல் தெரிவித்து அவற்றின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்